கேரளாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-08-12 21:45 GMT
விழுப்புரம், 


விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநில அணைகள் நிரம்பியுள்ளன. கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி தேசிய பேரிடர் நிதியிலிருந்து கேரளாவுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.

மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. தற்போது நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரி கடைமடைக்கு தண்ணீர்செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைபெரியார் அணை நிரம்பி வருவதால் அதிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே வைகை அணையில் தண்ணீரை தேக்கி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதோடு, பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. கூட்ட அரங்கில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் 12-வது மாநில மாநாட்டையொட்டி நிதியளிப்பு பேரவை கூட்டம் வட்ட செயலாளர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. 2 சட்டமன்ற தொகுதிக்கும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு யாருக்கு ஆதரவு என முடிவு செய்யப்படும் என்றார். 

மேலும் செய்திகள்