சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை : முல்லையன்கிரி மலைப்பாதையில் மண்சரிவு

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லையன்கிரி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-12 23:41 GMT
சிக்கமகளூரு,

ஹேமாவதி, துங்கா, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, ஒரநாடு, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தொடர் கனமழையால் ஹேமாவதி, துங்கா, பத்ரா ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மழையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடமாக கருதப்படும் முல்லையன்கிரிக்கு செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளன. மேலும் முல்லையன்கிரி மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக நேற்று மாலை வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண்சரிவு சீரமைக்கப்பட்டது. அதையடுத்து அந்த சாலை வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. மண்சரிவால் அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்