ஒரே நாள் இரவில் அரசு டாக்டர் உள்பட 10 பேரின் வீடுகளில் திருட்டு

ஒரேநாள் இரவில் அரசு டாக்டர் உள்பட 10 பேரின் வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-13 22:15 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சியை அடுத்த நெ.1டோல்கேட் அருகே தாளக்குடி அருண் நகரில் 10 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து திருட்டு சம்பவங்கள் நடந்த அனைத்து வீடுகளின் உரிமையாளர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் ஜியாவுதீன் (வயது 30), இவர் துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வீட்டினுள் படுத்து தூங்கிகொண்டிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் மேசை மீது இருந்த மூன்று செல்போன்கள், மடிக்கணினி உள்ளிட்ட ரூ. 80ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மேசை டிராயரில் வைத்திருந்த மூன்று ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றதும், நள்ளிரவில் அந்த பகுதியை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜியாவுதீன் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அங்கு காய்ந்துகொண்டிருந்த சேலைகளை எடுத்து ஒரு கம்பியில் கீழ் தளம் வரை கட்டி தொங்கவிட்டு அதன் வழியாக முதல் தளத்தின் பின்பக்கம் பால்கனியில் இறங்கி வீட்டினுள் வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோன்று அருகில் இருந்த அன்வர்பாட்ஷா (60), என்பவர் வீட்டின் பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் மீது ஏறி பின் பக்கம் இருந்த ஜன்னல் கதவின் வலையை அறுத்து அதன் வழியாக உள்ளே கையைவிட்டு அருகில் மேசை மீது இருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து சிக்கந்தர்பாட்ஷா (29) என்பவரது வீட்டிலும் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் கையை விட்டு ஒரு செல்போனை திருடிச்சென்றனர். தொடர்ந்து இதே பாணியில் அருகில் இருந்த மற்ற 7 வீடுகளில் இந்த திருட்டு சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த 7 வீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் கடந்த 8-ந் தேதி ஒரே நாள் இரவில் நெ.1டோல்கேட் பகுதியில் 8 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. மீண்டும் 10 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்