பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம்: விசைப்படகு இயக்க தடை நீடிப்பு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

பூலாம்பட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விசைப்படகு இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-15 22:30 GMT
எடப்பாடி,

கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்ததால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததை தொடர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு அதிகமான உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதனால் பூலாம்பட்டியில் இருகரைகளை தொட்டவாறு காவிரியில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விசைப்படகு இயக்குவதற்கான தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது. மேலும் எடப்பாடி தாலுகா பகுதியில் உள்ள காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் கரையோரமாக குளிப்பது, துணிதுவைப்பது, நீச்சல் அடிப்பது, கரையில்இருந்து வேடிக்கை பார்ப்பது மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி பூலாம்பட்டிக்கு வருகை தந்தார். பின்னர் படகுதுறைக்கு சென்று பார்வையிட்டார்.

கரையோர பகுதிகளில் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது எனவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரையோர பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும், எனவும் வருவாய்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

அவருடன், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், எடப்பாடி தாசில்தார் கேசவன், துணை தாசில்தார்கள் கோமதி, மாணிக்கம், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் சென்றனர். 

மேலும் செய்திகள்