சுதந்திரதின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கந்தசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.3 கோடியே 63 லட்சத்து 972 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-08-15 22:11 GMT
திருவண்ணாமலை,


இந்தியாவின் 72-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். காலை 9.20 மணியளவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்கள் மற்றும் தேசியக் கொடி நிறமுடைய வண்ண பலூன்களை அவர் பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை கலெக்டர் கந்தசாமி திறந்த ஜீப்பில் நின்றவாறு சென்று பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியும் ஜீப்பில் சென்றார்.

விழா பந்தலில் தியாகிகள் அமர்ந்திருந்தனர். அவர்களது இடத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கவுரப்படுத்தினார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 120 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்ட அலுவலகம், கூட்டுறவு துறை, கால்நடைபராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்பட பல்வேறு துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சத்து 72 ஆயிரத்து 497 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய ஒருமைப்பாடு, மக்கள் ஒற்றுமை, மத ஒற்றுமையை விளக்கி நடந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் தற்காப்பு கலை, போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை கலெக்டர் கந்தசாமி வழங்கி பாராட்டினார். விழாவில் உதவி கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் தங்கவேல், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தினவிழா நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. 

மேலும் செய்திகள்