கருணாநிதி சமாதி பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

கருணாநிதி சமாதி பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2018-08-16 23:15 GMT
திருச்சி,

கருணாநிதிக்கு சமாதி கட்டுவதற்கு இடம் கேட்டு முதல்- அமைச்சரிடம் கெஞ்சினோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என ஸ்டாலின் சொன்னார். ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பெயர்களில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த ஐந்து வழக்குகளையும் நடத்தியது தி.மு.க. தான். ஒரே நாள் இரவில் இந்த ஐந்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி உடலை உரிய முறையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு அதிகாரிகளை அனுப்பி அனைத்து உதவிகளையும் செய்தார். இதனை எல்லாம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். தனது தந்தையாரின் மரணத்திலும் கூட அவர் அரசியல் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருச்சி பீம நகரில் சிறிய பல்பொருள் அங்காடி, லால்குடி சிவஞானம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருப்பு உடைக்கும் புதிய எந்திரம், விதை நெல் சுத்திகரிக்கும் எந்திரம் ஆகியவற்றை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் பழனிசாமி, எம்.பி.க்கள் டி.ரத்தினவேல், ப.குமார், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி, பயிர் கடன், இடுபொருட்கள் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பாக, மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடனான ஆய்வு கூட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தினார். 

மேலும் செய்திகள்