கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-17 22:01 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் களுக்கு தனியார் கல்வி நிலையங்களுக்கு படிக்க கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. 2018-19-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர், பட்டயப் படிப்பு, இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தலை மாணவ-மாணவிகள் வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மத்திய அரசின் www.sch-o-l-a-rs-h-ip.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்