திருமயம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்

திருமயம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-08-18 22:30 GMT
திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சித்தளஞ்சாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயம் பெரியமாடு, நடுமாடு, சிறியமாடு என 3 பிரிவாக நடந்தது. இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை பாலகுடிப்பட்டி கோபிநாத் மாடும், 2-வது பரிசை பிராமணவயல் சுந்தரம் மாடும், 3-வது பரிசை விராமதி தையல்நாயகி மாடும் பெற்றன.

நடுமாடு பிரிவில் முதல் பரிசை பாதரகுடி மனோஜ் குமார் மாடும், 2-வது பரிசை சித்தாத்திவயல் பொன்னுசாமி மாடும், 3-வது பரிசை குளத்துப்பட்டி சாமிசுரேஷ் மாடும் பெற்றன. சிறியமாடு பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் வெண்டி முத்தையா மாடும், 2-வது பரிசை அரிமளம் சேத்துமேல் செல்வ அய்யனார் மாடும், 3-வது பரிசை பரமத்தூர் குமார் மாடும் பெற்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை திருமயம் - அரிமளம் சாலையில் பொதுமக்கள் இருபுறமும் கூடிநின்று கண்டுகளித்தனர்.

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள மடக்கரை பத்திர காளியம்மன் கோவிலில் நடந்த ஆடி பூர விழாவையொட்டி நேற்று முன்தினம் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 25-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். 

மேலும் செய்திகள்