தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பார்த்தவுடன் கோவில் சுவரில் ஏறி குதித்ததால் கை எலும்பு முறிந்தது.

Update: 2018-08-19 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் பொந்திரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மகன் விஜயன். இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இவர் பெயரை போலீசார் சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில் தஞ்சை வடக்குவீதியை சேர்ந்த செந்தில்குமார், அந்த பகுதியில் நடந்து சென்றபோது அவரை விஜயன் வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.200-யை பறித்ததுடன், செல்போனையும் பிடுங்கி உடைத்துவிட்டார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வடக்குவாசல் பகுதியில் உள்ள கோவிலில் விஜயன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த விஜயன், கோவில் சுவரில் ஏறி குதித்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் கீழே குதித்தபோது வலது கையை தரையில் ஊன்றியதால் அவரது கை எலும்பு முறிந்ததால் தப்பி செல்ல முடியவில்லை. பின்னர் விஜயனை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிவுரையின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்