தாய்–சேய் நலத்தை பாதுகாக்க மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற வேண்டும்

தாய்–சேய் நலத்தை பாதுகாக்க மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற வேண்டும் என கர்ப்பிணிகளிடம் மருத்துவ குழுவினர் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2018-08-19 21:54 GMT

தொண்டி,

திருவாடானை, தொண்டி பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் 2 பேர் இயற்கையாக வீட்டிலேயே பிரசவம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனையறிந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அவர்களது குடும்பத்தினரை அடிக்கடி நேரில் சென்று சந்தித்து உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் பிரசவத்தின் போது தாய்–சேய் உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் இருக்க கர்ப்பகால பராமரிப்பு அவசியம் என்று ஆலோசனைகள் வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கர்ப்பிணிகள் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இந்த இருவரும் 7, 8 மாத கர்ப்பிணிகளாக இருப்பதால் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறியதாவது:– உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய சுகாதார கொள்கை அடிப்படையில் பிரசவத்தின் போது தாய்–சேய் மரணத்தை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பெண்கள், கர்ப்பம் தரித்தது தெரிந்தவுடன் 45 நாளில் அந்தந்த பகுதி சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை, மாதந்தோறும் பரிசோதனை, ரத்த பரிசோதனை, எடை, ஸ்கேன் பரிசோதனை, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு கர்ப்பகால பாராமரிப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி அட்டை வழங்கப்பட்டு உரிய காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தை இறப்பை தடுக்க முடியும்.

இன்றைய உலகில் வீட்டில் பிரசவம் பார்ப்பது இயலாத காரியம். பிரசவங்கள் அனைத்தும் மருத்துவமனைகளில் நடைபெறுவதின் மூலம் மட்டுமே தாய்–சேய் நலத்தை பாதுகாப்பதுடன், அவர்களின் உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கு கர்ப்பிணி பெண்களும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து கர்ப்பிணி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்