ஓட்டேரியில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் கைது

ஓட்டேரியில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-20 22:15 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு நரசிம்மலு நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சீனிவாசலுவிடம் இருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சீனிவாசலு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ஓட்டேரி சந்திரயோகி சமாதி சந்திப்பில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் வண்டியை திருப்பிக்கொண்டு வேகமாக செல்ல முயன்றார்.

இதில் நிலை தடுமாறி அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே போலீசார் ஓடிச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வினோத் (20) என்பதும், மாதவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

வினோத் தனது நண்பர் பாபு (21) உடன் சேர்ந்து சீனிவாசலுவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றதையும், ஏற்கனவே கொடுங்கையூர் பகுதியில் இதே போல் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதையும் போலீசில் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் பறிப்பில் தொடர்புடைய வினோத்தின் நண்பர் பாபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்