கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காலி குடங்களுடன் அமர்ந்து பெண்கள் போராட்டம்

கடலூரில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காலி குடங்களுடன் அமர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-20 23:09 GMT
கடலூர், 


கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எம்.புதூர் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம் ஆகிய 2 கிராமங்களில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது பற்றி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 2 கிராமங்களைச்சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு கடலூருக்கு வந்திருந்தனர். ஆனால் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு காலி குடங்களுடன் அமர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தினர். உடனே போலீசார், காலி குடங்களை ஓரமாக வைத்துவிட்டு மனு கொடுக்க செல்லுங்கள் என்றனர். இதையடுத்து பெண்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே காலி குடங்களை வைத்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மாவட்ட வருவாய் அதிகாரி விஜயாவிடம் மனு கொடுத்தனர்.

எம்.புதூர் கிராம பெண்கள் கொடுத்த மனுவில், எம்.புதூர் கிழக்குத்தெரு திருப்பதி பாலாஜி நகரில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்து 3 மாதங்களாகி விட்டது. இது பற்றி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் முறையிட்டபோது பழைய மோட்டாரை கழற்றி விட்டு வேறொரு பழைய மோட்டாரை பொருத்தினார். ஆனால் மறுநாள் அதனை கழற்றி எடுத்துச் சென்று விட்டனர். இதனால் தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகிறோம். இதற்கு தீர்வு கண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதேபோல் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், புதுப்பாளையம் பிள்ளையார்கோவில் தெருவுக்கு குடிநீர் வினியோகிக்கும் ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்து 4 மாதங்களாகிறது, அதனை இதுவரை சரி செய்யாததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். எனவே புதிய மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்