வெள்ளகோவில் அருகே போலி எண்ணெய் ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

வெள்ளகோவில் அருகே போலி எண்ணெய் ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2018-08-21 00:00 GMT

வெள்ளகோவில்,

உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அவ்வப்போது சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது உணவு சம்பந்தமான பொருட்களில் கலப்படம் செய்து இருப்பது தெரியவந்தால், உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே கணேசன் புதூரில் ஸ்ரீஅம்பாள் டிரேடர்ஸ் என்ற முகவரியில் இயங்கி வரும் எண்ணெய் ஆலை உரிமம் பெறாமல் எண்ணெயை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டாக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், சதீஷ்குமார், லியோ, ராமச்சந்திரன் ஆகியோர் அந்த எண்ணெய் ஆலைக்கு நேற்று அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த ஆலையில் ½ லிட்டர் எண்ணெய் பாக்கெட் மற்றும் 15 லிட்டர் எண்ணெய் கொண்ட டின்கள் இருந்தன. அவற்றில் சுகுணா கோல்டு சன் பிளவர் ஆயில், சன் பிளவர் ஆயில், ஜெய கருடா கடலை எண்ணெய் மற்றும் திருப்பதி கடலை எண்ணெய் என அச்சிடப்பட்ட லேபிள்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

ஆனால் அழகாபுரிநகர், வெள்ளகோவில் என்ற முகவரிக்கு கடலை எண்ணெய் மற்றும் சன் பிளவர் ஆயிலை தவிர மற்ற எண்ணெய் வினியோகத்திற்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு, கணேசன் புதூரில் போலியாக எண்ணெய் ஆலை இயங்கி வருவதும், மேலும் உரிமம் பெறாமல் கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ½ லிட்டர் பாக்கெட் மற்றும் 15 லிட்டர் டின்களில் அடைத்து போலியான முகவரி கொண்ட லேபிள்களை ஒட்டி வினியோகம் செய்ததும், அந்த பாக்கெட்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் தவறான உரிமம் எண் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் என மொத்தம் 1,550 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமாகும். மேலும் அந்த போலி எண்ணெய் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் அதன் மாதிரியை எடுத்து ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி உணவு பாதுகாப்பு சட்டம் 2011–ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு கலப்படம் செய்வோரை கண்டறிய வாட்ஸ்– அப் எண் 94440–42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளகோவில் அருகே போலி எண்ணெய் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்