நாகர்கோவிலில் ரூ.1½ கோடி மோசடி: சயனைடு தின்று தற்கொலை செய்தது கள்ளக்காதல் ஜோடி

நாகர்கோவிலில் ரூ.1½ கோடி மோசடி செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட ஜோடி கள்ளக்காதலர்கள் என்று போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-08-22 23:15 GMT
நாகர்கோவில்,

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 48). ஈரோடு மாவட்டம் பவானி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வி. இவர்கள் 2 பேரும் கணவன், மனைவியாக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரில் வசித்து வந்தனர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏராளமானவர்களிடம் சுமார் ரூ.1½ கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி தம்பதி மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு ரெயிலில் சென்றது தெரியவந்தது.

நாக்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது ராஜ்குமார், சிவசெல்வி ஆகிய இருவரும் ரெயிலில் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் நாக்பூர் விரைந்துள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜ், இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் மருங்கூரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்- மனைவியாக வாழ்ந்த ராஜ்குமார், சிவசெல்வி ஆகியோரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மருங்கூரில் வசித்து வந்த ராஜ்குமார்- சிவசெல்வி ஆகிய இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் உறவினர்களை போன்று பழகி அனைவரையும் கவர்ந்துள்ளனர். மேலும் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகியவர்களிடம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளனர். அதேபோல் முதலில் அவர்களை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நகைகளை வாங்கிக்கொடுத்து லட்சக்கணக்கில் லாபம் பெறச்செய்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளனர். அவ்வாறு லாபம் பெற்றவர்கள் பலரிடமும் தாங்கள் லாபம் அடைந்ததையும், அதற்கு காரணமான ராஜ்குமார் மற்றும் சிவசெல்வியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

இதைநம்பி மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வாசன் (44) என்பவர் உள்பட 11 பேர் ரூ.1½ கோடி பணத்தை கொடுத்துள்ளனர். அதைப்பெற்றுக்கொண்ட ராஜ்குமார், சிவசெல்வி இருவரும் திடீரென மருங்கூரில் தங்கிய வீட்டை காலிசெய்துவிட்டு தலைமறைவாயினர். அவர்களை பற்றி விசாரித்த போதுதான் நாக்பூரில் ரெயிலில் சென்றது தெரிய வந்தது. நாக்பூர் போலீசார் மூலம் கைது செய்ய முயன்ற போது அவர்கள் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் 2 பேர் பற்றியும் மருங்கூர் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தபோது பல்வேறு தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது 2 பேரும் கணவன்- மனைவி அல்ல என்பது தெரிய வந்துள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் திருமணமாகாதவர். தொழிலில் நஷ்டம் அடைந்த ராஜ்குமாருக்கும், ஏற்கனவே திருமணமான சிவசெல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு குமரி மாவட்டம் வந்த அவர்கள் மருங்கூரில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது உண்மைதானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

மேலும் இவர்களிடம் மருங்கூரில் பணம் கொடுத்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் வாசன் உள்பட 11 பேர் மட்டும்தான் ரூ.1½ கோடி அளவில் பணம் கொடுத்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. நாக்பூர் போலீசார் தம்பதியை சுற்றி வளைத்தபோது கைப்பற்றப்பட்ட பேக்குகளில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுடைய உடல்கள் குமரி மாவட்டம் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை. உறவினர்கள் யாராவது உடல்களை பெற முன்வந்தால் நாக்பூர் போலீசார் ஒப்படைப்பார்கள்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ராஜ்குமார் தன்னிடம் பணம் கொடுத்த சிலருக்கு நாகர்கோவில் உள்ள நகைக்கடைகளில் இருந்து நகைகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பழக்கத்தை வைத்து நாகர்கோவில் நகைக்கடைகள் சிலவற்றில் ராஜ்குமார் கடனாக லட்சக்கணக்கில் நகை வாங்கியதாகவும் தெரிகிறது. அப்படி சில நகைக்கடைக்காரர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் அவர் ஏமாற்றி மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்