தோட்ட காவலாளி கொலை வழக்கில் முதியவர் கைது

மயிலாடும்பாறை அருகே தோட்ட காவலாளி கொலை வழக்கில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-22 22:00 GMT
கடமலைக்குண்டு,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மயிலாடும்பாறை அருகேயுள்ள ஓட்டணை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55). இவர் மயிலாடும்பாறை அருகே ரெங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 28-ந் தேதி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற ரங்கசாமி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ரங்கசாமியின் மனைவி செல்வி தோட்டத்திற்கு சென்றார். அங்கு ரங்கசாமி கழுத்து மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

விசாரணையில் ரங்கசாமிக்கும், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் கல்யாணி(65) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து கல்யாணியை விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் கல்யாணி அங்கு இல்லை. அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கல்யாணியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலாடும்பாறை அருகே உள்ள பொன்னன்படுகை விலக்கு பகுதியில் கல்யாணி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தோட்டப்பகுதியில் ஆடுகள் மேய்ந்ததாக ரங்கசாமியுடன் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி மீண்டும் தோட்டப்பகுதியில் ஆடுகள் மேய்ந்தது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது ஆத்திரத்தில் கையில் இருந்து அரிவாளால் ரங்கசாமியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கல்யாணியை ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்