டிசம்பர் 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் : மராத்தா சமுதாயத்தினர் அறிவிப்பு

நவம்பரில் இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் டிசம்பர் 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர்.

Update: 2018-08-22 22:45 GMT
மும்பை,

மராட்டிய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். இடஒதுக்கீடு கோரி இவர்கள் நடத்திய போராட்டத்தினால் மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் அந்த சமுதாயத்தை ேசர்ந்த பலர் கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.

அதே நேரத்தில் நவம்பர் மாதம் வரையிலும் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் எதுவும் செய்ய இயலாது என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மராத்தா சமுதாயத்தினரின் போராட்டம் ஓய்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக மராத்தா கிராந்தி தோக் மார்ச்சா என்ற அமைப்பினர் மும்பையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் வருகிற நவம்பர் மாதத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தாங்கள் வலியுறுத்தியபடி 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மராத்தா சமுதாயத்தினர் மீது போடப்பட்ட வன்முறை வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அவ்வாறு மராத்தா சமுதாயத்தினர் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்