இயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள் என்று கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-22 22:00 GMT
கடலூர், 

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, சுடப்படாத களி மண், ரசாயன கலவையற்ற கிழங்குமாவு, ஜவ்வரிசி மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட, நீரில் கரையும் தன்மையுடைய, இயற்கை வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

அந்த சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட உப்பனாறு, தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகியவற்றில் மட்டும் கரைக்க வேண்டும். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது. எனவே மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பின்றி கொண்டாடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்