கோஷ்டி மோதலில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் கோஷ்டி மோதலில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-22 23:31 GMT
சேலம்,

சேலம் பெரியபுதூர் எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), ரவுடி. இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி ரோட்டில் உள்ள சுற்றுலா மாளிகை எதிரே மீன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு வெங்கடேசன் வழக்கம்போல் மீன்களை வறுத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடையின் அருகே வந்தனர். இவர்கள் அங்கு வந்து வெங்கடேசனிடம் பேச்சுகொடுத்தனர். இதையடுத்து அவர் கடையை விட்டு வெளியே வந்தார். இதுதான் தக்க சமயம் என கருதி வந்த அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெங்கடேசனின் கழுத்து, முகம், வயிற்றில் சரமாரியமாக வெட்டினர். இதில் வெங்கடேசனுக்கு முகம் சிதைந்ததுடன், குடலும் சரிந்தது.

மேலும் தன் உடல் மீது வெட்டு விழாமல் இருக்க வெங்கடேசன் கையால் தடுத்தார். அந்த நபர்கள் அவரது கையிலும் வெட்டியது. இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த வெங்கடேசன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையறிந்த சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் படுகொலை செய்யப்பட்ட வெங்கடேசன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே வெங்கடேசன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவருடைய உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர். இந்த கொலை தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கொலையான வெங்கடேசன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒரு வழக்கில் சிறை சென்று விட்டு வெளியே வந்ததும், தற்போது மீன் கடை நடத்தி வந்ததும், வெங்கடேசனுக்கு அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

அதன் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும், கொலையில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது தெரிந்துவிட்டதாகவும், தப்பி ஓடிய 3 பேர் கொண்ட ரவுடி கும்பலை வலைவீசி தேடி வருவதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சேலத்தில் இரவில் கோஷ்டி மோதல் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்