சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கு: வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-08-23 23:27 GMT
தானே,

நவிமும்பை, பேலாப்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார். அதே பகுதியை சேர்ந்த ரோகித் ரமேஷ் கதம்(வயது 27) என்பவர் அந்த பெண்ணை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதன்பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி அவர்கள் நவிமும்பை திரும்பினர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமியை, வாலிபர் ரோகித் ரமேஷ் கதம் கற்பழித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நடந்த மருத்துவ பரிசோதனையிலும் சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடு்த்து போலீசார் ரோகித் ரமேஷ் கதம் மீது கடத்தல், கற்பழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றமான போக்சோ போன்ற சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர் மீதான வழக்கு தானே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ரோகித் ரமேஷ் கதம், சிறுமியின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயித்ததால், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன்னுடன் வந்ததாக தெரிவித்தார்.

இருப்பினும் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு சட்டத்தால் ரோகித் ரமேஷ் கதமிற்கு எந்த கருணையும் காட்ட முடியாது என கூறியதுடன், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ. 22 ஆயிரம் அபராதமும் விதித்தார். 

மேலும் செய்திகள்