செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்

காரைக்கால் கடற்கரையில் செயற்கை பவளப்பாறைகளை அமைக்கும் திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-24 00:22 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை, எம்.எஸ் சுவாமிநாதன் பவுண்டேஷன் மற்றும் நபார்டு வங்கியுடன் இணைந்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, செயற்கை பவளப்பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் துறைமுகத்தின் முகத்துவாரம் அருகே கொண்டு செல்லும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா, இந்திய கடலோர காவல்படை கமாண்டர் விவேக் ரோத்ரா, நபார்டு வங்கி சென்னை கிளை மேலாளர் பத்மா ரகுநாதன், எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் முதன்மை விஞ்ஞானி முனைவர் வேல்விழி, மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் முதன்மை விஞ்ஞானி முனைவர் வேல்விழி பேசியதாவது:-

காரைக்காலில் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து உள்ளது. எனவே எதிர்கால மீனவர்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு செயற்கை பவளப்பாறைகள் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 800 கிலோ முதல் ஒரு டன் வரை எடை கொண்ட 48 செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் ரூ.10 லட்சமும், நபார்டு வங்கி ரூ.10 லட்சம் நிதிஒதுக்கி உள்ளது.

இந்த பவளப்பாறைகள் மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல் பரப்பில், மீனவர்களின் படகுகள் பாதிக்காத வகையில் கடலில் 10 மீட்டர் ஆழத்தில் சிறிய கப்பலில் குறிப்பிட்ட தூரம் சென்று அமைக்கப்படும். இப்பாறைகளில் சிறிது சிறிதாக பாசிகள் உருவாகும். அதன் பிறகு, கடல்வாழ் உயிரினங்களான இறால், சிறியவகை மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். குறைந்தபட்சம் இதற்கு ஒரு ஆண்டுகள் ஆகும். இந்த ஓராண்டில் மீன்வர்கள் செயற்கை பவளப்பாறை உள்ள பகுதியில் மீன் வலைகளை பயன்படுத்தாமல் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போது தான் திட்டத்தின் நோக்கம் வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஏராளமான மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் காரைக்கால் கடற்கரையின் முக்கிய இடங்களில் கடற்பாசிகளை உருவாக்கி பெண்களின் வருவாய்க்கு உதவவேண்டும் என மீனவப்பெண்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்