மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா தொடங்கியது

மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடைபெறும் உலக யோகா திருவிழாவை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் தொடங்கி வைத்தார். இதில் சீனா, இலங்கை, தாய்லாந்து நாட்டு யோகாசன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Update: 2018-08-24 23:00 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழாக்குழு மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் உலக யோகா திருவிழா நேற்று தொடங்கியது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா திருவிழாவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யுவ தயாளன் தலைமையில், தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் பழனிகுமார் பேசியதாவது:- காலை எழுந்தவுடன் யோகாசனம் செய்வதன் மூலம் தங்கள் உடல் நலனை பாதுகாப்புடன் வைத்து கொள்ளலாம். தமிழக சுற்றுலாத்துறையும் பல்வேறு இடங்களில் சுற்றுலா வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளிடம் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தினமும் யோகாசன பயிற்சி மேற்கொண்டால் புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை தங்கள் உடலில் இருந்து முழுமையாக குணப்படுத்தி அப்புறப்படுத்தி விடலாம். உலகம் முழுவதும் யோகாசன பயிற்சி முறை பரவி வருகிறது.

பள்ளி பருவத்திலேயே யோகாசனம் கற்றுக்கொடுக்கும் முறை பல இடங்களில் வந்துள்ளது. ஆரோக்கியத்துடன் குழந்தைகள், பள்ளி சிறுவர்கள் வளரவும் யோகாசனம் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் மூலம் நமது ஆயுளை நீட்டித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் யோகாசனம் குறித்த பயிற்சி புத்தகத்தை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா திருவிழாவில் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, இலங்கை, சீனா, ஹாங்காங் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த யோகாசன கலைஞர்களும் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பிக்க உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த யோகாசன பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு அசத்த உள்ளனர். இவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படஉள்ளன.

நேற்று நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் பலர் புல் தரையில் அமர்ந்து யோகாசன பயிற்சி மேற்கொண்டனர். அதில் சிறந்த யோகாசனம் செய்து அசத்திய மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விழாவின் இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

சீனாவை சேர்ந்த யோகாசன கலைஞர்கள் பலர் பயிற்சி மேற்கொண்டிருந்த தமிழக யோகாசன மாணவர்கள், சிறுவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்