ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

அக்கரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2018-08-24 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை நகர பகுதியில் அக்கரைக்குளம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை நகராட்சி சார்பில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் குளம் தூர்வார பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குளத்திற்கு தண்ணீர் விடக்கோரியும், அந்தப்பகுதியில் வடிகாலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு கட்டியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அக்கரைக்குளம் பகுதி மக்கள் நாகை கோட்டைவாசல் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்