ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-08-24 21:46 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் குடிநீர் குழாயில் உள்ள மின்மோட்டார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டு, செயல் இழந்து போனது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டது. குப்பத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கும் தண்ணீர் இல்லாததால் மாணவர்களும் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி அலுலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து அன்னவாசல் போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வசதி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்