ஊதிய உயர்வு வழங்க கோரி தர்மபுரியில் அரசு டாக்டர்கள் ஊர்வலம்

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க கோரி தர்மபுரியில் அரசு டாக்டர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-08-24 23:12 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பட்ட மேற்படிப்பு சேவை டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் கவுரிசங்கர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ரெங்கசாமி, ஸ்டாலின், அபினேஷ் உள்பட நூற்றுக்கணக்கான அரசு டாக்டர்கள் கோரிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தில் சுகாதார பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு டாக்டர்களுக்கு 13 ஆண்டுகளில் வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை மாநில அரசு டாக்டர்களுக்கும் அதே காலகட்டத்தில் வழங்க வேண்டும்.

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்குவதை போலவே பணி சார்ந்த பணப்பலன்களை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஊர்வலம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கினார்கள். ஊர்வலத்தையொட்டி தர்மபுரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்