ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே முறையாக பொருட்கள் வழங்க கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-24 22:00 GMT
சேத்தியாத்தோப்பு, 


ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில் 900-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வசதியாக அதே பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது.
வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும், இந்த கடையை கடந்த சில மாதமாக ஊழியர்கள் சரிவர திறக்கவில்லை என தெரிகிறது. மேலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை.


இதனால் இப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வட்ட வழங்கல் அதிகாரி சிவகங்கை சம்பவ இடத்துக்கு விரைந்த வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், ரேஷன் கடையை சரிவர திறந்து முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு வட்ட வழங்கல் அதிகாரி சிவகங்கை, ரேஷன் கடை ஊழியரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்வதாகவும், தற்போது உடனே அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்