நாகர்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2018-08-25 22:45 GMT
நாகர்கோவில்,

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் (மக்கும் தன்மை இல்லாத) பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு வருகிற 1–1–2019 முதல் தடை செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் கடந்த 15–ந் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் நகரில் உள்ள உணவகங்கள், டீ கடைகள் மற்றும் அனைத்து விதமான கடைகளிலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், தாள்கள், தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பேரணியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அண்ணா சிலையை சுற்றி மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிவடைந்தது. பேரணியாக சென்றவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். அதைத் தொடர்ந்து சந்தை வியாபாரிகளுக்கு துணி பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்