திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.

Update: 2018-08-25 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாரதீய ஜனதா பலம் பொருந்திய கட்சியாக மாற வேண்டும் என்பதற்காக எங்களது அடிப்படை உறுப்பினர்களை அதிகரித்து வருகிறோம். தமிழகத்தில் ஏறக்குறைய 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மிக பெரிய பொதுக்கூட்டம் அடுத்த மாதமோ அல்லது அதற்கு அடுத்த மாதமோ நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

சென்னையில் வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், தங்களது எல்லையையும் மீறி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதுபோன்ற ஒற்றுமையான சூழல்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

எல்லா நிகழ்வையும் கூட்டணியோடு பொருத்தி பார்ப்பது நல்லது அல்ல. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வுக்கு தேசிய தலைவர் அமித்ஷா வருவார் என்றால் அதிகாரப்பூர்வ தகவல் மத்தியில் இருந்து மாநில தலைமைக்கு சொல்வார்கள். அவரது பயண திட்டம் எதுவும் எங்களுக்கு தற்போது வரை வரவில்லை.

வதந்தி, டுவிட்டர் பதிவு வந்த உடனே முழுவதுமாக அதிகாரப்பூர்வ கருத்து என்று என்னால் சொல்ல முடியாது. இப்போது வரை உலா வரும் அத்தனை கருத்துக்களும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஆகும்.

அனைத்து இடைத்தேர்தல்களையும் பா.ஜ.க. சந்தித்துள்ளது. இடைத்தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும். இன்னொரு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போன்று மாறி விடக்கூடாது. பா.ஜ.க. தலைமையகத்தை கலந்தாலோசித்து திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும்.

ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் மீது வரலாம். அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். விசாரணை பாதகமாக இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பிறகு தான் யாரைப்பற்றியும் கருத்து சொல்ல முடியும். ஆனால் ஊழலற்ற தன்மைக்குதான் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.

ரஷியாவிற்கு மருத்துவம் படிக்க சென்ற 2 மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளனர். அதன் பின்னர் அவர்களுக்கு வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகையில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. வெளிநாட்டுக்கு படிக்க செல்பவர்கள், அவர்களை அனுப்பும் அமைப்பு மீது தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். ஒரு குழு அமைத்து வெளிநாடுகளுக்கு படிக்க அழைத்துச் செல்பவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். பொய்யான தகவல் கொடுத்து மாணவர்களை அழைத்து செல்லும் போலி நிறுவனங்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்