வேலூர்: மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபருக்கு அடி-உதை

வேலூரில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-08-25 23:00 GMT
வேலூர்,

வேலூர் ஆற்காடு சாலை பொதுமக்கள் அதிகமாக காணப்படும் சாலையாகும். இந்த சாலையின் இருபுறமும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.

இந்த நிலையில் வாலிபர் ஒருவர் அந்தபகுதியில் நின்றிருந்த மோட்டார்சைக்கிளை திருடுவதற்காக நோட்டமிட்டார். இதையடுத்து அவர், ஒரு மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் உள்ள ‘லாக்கை’ உபகரணங்கள் உதவியுடன் உடைத்து மெதுவாக மோட்டார்சைக்கிளை நகர்த்தினார். அப்போது எதிரே உள்ள கடையில் இருந்து பார்த்து கொண்டிருந்த சிலர் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சரியாக பதில் கூறவில்லை.

இதையடுத்து அந்தபகுதியில் உள்ளவர்கள் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை ஒரு ஓட்டலில் உட்கார வைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி பிடித்து அடித்து உதைத்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பொதுமக்கள் அந்த வாலிபரை போலீஸ்காரரிடம் ஒப்படைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் அந்த வாலிபர் போலீஸ்காரரிடம் இருந்தும் தப்பினார். பின்னர் அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து மீண்டும் போலீஸ்காரரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீஸ்காரர் அந்த வாலிபரை ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

போலீசார் விசாரணையில், அவர் கொணவட்டம் மதினாநகர் 7-வது தெருவை சேர்ந்த அண்ணாமலை (வயது 30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்