மும்பையில் சட்டவிரோதமாக 30 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன

மும்பையில் சட்டவிரோதமாக 30 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-08-26 23:41 GMT
மும்பை,

மும்பை போரிவிலி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன் தகாத செயலில் ஈடுபட்டதாக ராஜ் பகதூர்பால் (வயது40) என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் உரிய உரிமங்கள் இன்றி ஆட்டோ ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து மும்பை ஆட்டோ டிரைவர் சங்கம் வெளியிட்டு உள்ள தகவலில் சட்டவிரோதமாக 30 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவல் குறித்து ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் சசாங்ராவ் கூறியதாவது:-

மும்பையில் மேற்கு, கிழக்கு புறநகரில் 1 லட்சத்து 80 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடு கின்றன. இதில் சுமார் 30 ஆயிரம் ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இயக்கப்படுகின்றன. சட்டவிரோதமாக ஆட்டோக்களை ஓட்டும் டிரைவர்களே பெண்களிடம் தவறாக நடக்கின்றனர். மீட்டரில் சூடு வைத்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்களால் தான் மற்ற ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் கெட்டுப்போகிறது.

சில வாரங்களுக்கு முன் சட்டவிரோதமாக இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோம். மும்பையில் இயக்கப்படும் சட்டவிரோத ஆட்டோக்கள் மீது போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்