இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-27 21:30 GMT
சேலம், 

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு திருநங்கை அந்த பஸ்சிற்கு வந்து அங்கிருந்த பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அந்த பஸ்சில் இருந்த மாஜிஸ்திரேட்டு ஒருவர், திருநங்கையிடம் ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறினார். இதைகேட்காமல் அந்த திருநங்கை மாஜிஸ்திரேட்டிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்தும் சேலம் குகை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 28) என்ற பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதைத்தொடர்ந்து சத்யா பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரமனூர் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஜாவீத் (27) என்பதும், பயணியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்