ரூ.10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் வழக்கில் கூரியர் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

ரூ.10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கூரியர் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-08-27 23:19 GMT
மும்பை,

மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் மூலமாக தங்கம் கடத்தப்படுவதாக கடந்த 6-ந்தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் விமானநிலைய பார்சல்(கார்கோ) பிரிவுக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஹாங்காங் நாட்டில் இருந்து வந்த பார்சலில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் தங்க கடத்தலில் தொடர்புடைய கூரியர் நிறுவன உரிமையாளர் காஜூவா மோய்தீன், அவரது உறவினர் அப்துல்லா சேக் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் ஹாங்காங் நாட்டில் இருந்து கடந்த மாதம் மட்டும் ரூ.180 கோடி மதிப்புள்ள தங்கத்தை பார்சல் மூலம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் சென்னையை சேர்ந்த சாமுவேல், அவரது சகோதரர்கள் ரமேஷ், மகேஷ், சூரத் வைர வியாபாரியான சந்தீப், பரத் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்