கறம்பக்குடி பஸ் நிலைய சாலையில் தேங்கிய மழைநீரை பாத்திரத்தில் அள்ளி அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள்

கறம்பக்குடி பஸ் நிலைய சாலையில் தேங்கிய மழைநீரை பாத்திரத்தில் அள்ளி துப்புரவு தொழிலாளர்கள் அகற்றினர்.

Update: 2018-08-28 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் 2–வது பெரிய பேரூராட்சியாகவும் உள்ளது. இருப்பினும் கறம்பக்குடி பேரூராட்சியில் முறையான சாலை வசதியோ, வடிகால் வசதியோ இல்லை. மேலும் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் கறம்பக்குடி பஸ் நிலையம் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் சாதாரண மழை பெய்தாலே சாலைகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி விடுகிறது. வடிகால் வசதி இல்லாததால் இந்த மழைநீரை அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். கழிவுநீர் அகற்றும் வண்டியும் பழுதாகி இருப்பதால், சாலைகளில் தேங்கிய மழைநீரை துப்புரவு தொழிலாளர்கள் பாத்திரத்தில் அள்ளி அகற்றி வருகின்றனர். மேலும் சாக்கடை நீரும் கலந்துள்ள மழைநீரை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி துப்புரவு தொழிலாளர்கள் பாத்திரத்தில் அகற்றுவது பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

எனவே கறம்பக்குடி பகுதியில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்கவும், முறையான வடிகால் வசதி ஏற்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்