ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2018-08-30 23:15 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. இவரது மனைவி வாணி (வயது 35). இவர்களது மகன் தாமோதரன் (16). பிளஸ்-1 படித்து வருகிறான். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே வாணி கணவரை விட்டு பிரிந்து, கடந்த 16 வருடங்களாக தனியாக ஆண்டிப்பட்டி நகர் பாப்பம்மாபுரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இருவரும் சேர்த்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி காலையில் சிவராஜ், மனைவி வாணியுடன் தனது தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்றார். அதன் பின்னர் மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு, பூ மார்க்கெட்டிற்கு சென்ற சிவராஜ் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது அரை மயக்க நிலையில் இருந்த வாணி தான் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து வாணி சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாணி நேற்றுமுன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார், வாணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வாணியின் உறவினர்கள், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உள்ள தேனி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலினால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்