ராஜபாளையம் அருகே பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகளை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-30 23:42 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி காளியம்மாள்(வயது 55). இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், பெரியசாமி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே காளியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். அந்த பகுதிக்கு அருகே உள்ள மேட்டு வடகரையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க சென்றார்.

நேற்று காலை இவர் வெளியே வராத நிலையில், இவரது வீட்டின் தொலைக்காட்சி அதிக சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கப்படவில்லை.

இதைதொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் காளியம்மாள் பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக அவர்கள் கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, தலையில் பலமாக தாக்கப்பட்டதால் காளியம்மாள் இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 2 தங்கச்சங்கிலிகள், மோதிரம், தோடு என 10 பவுன் நகைகள் மற்றும் வீட்டின் பெட்டியில் இருந்த ரொக்க பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். மேலும் காளியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கீழராஜகுலராமன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என தெரியவில்லை. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, காளியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்