கலெக்டர் அலுவலகத்தில் உணவு வாங்க ஊழியர்களுக்கு கேரியர்கள் வினியோகம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிநேரத்தில் உணவு வாங்க கேரியர்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

Update: 2018-08-31 21:45 GMT
தர்மபுரி,

தமிழகத்தில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில், பாலிதீன், பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கோப்பைகளை பயன்படுத்தகூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உணவு பொருட்களை எடுத்துவர எவர்சில்வர் கேரியர்களையே பயன்படுத்த வேண்டும். இதேபோல் குடிநீரை எவர்சில்வர் பிளாஸ்க்குகளில் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக மதிய உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி வர எவர்சில்வர் கேரியர்களை வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் மதிய உணவை ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுகிறார்கள். இவ்வாறு ஓட்டல்களில் இருந்து பார்சல் எடுத்து வரும்போது பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி எவர்சில்வர் கேரியர்களை வினியோகிக்கும் பணி உணவு பாதுகாப்புத்துறை மூலம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தினமும் மதிய நேரத்தில் எவர்சில்வர் கேரியர்கள் கட்டணமின்றி வினியோகிக்கப்படும். இவற்றை பெற்று செல்பவர்கள் மீண்டும் திருப்பி கொண்டு வந்து கொடுப்பதை உறுதிசெய்வதற்காக ரூ.100- மட்டும் வைப்பு தொகையாக பெறப்படும். அந்த கேரியர் திருப்பி இங்கு கொடுக்கப்பட்டவுடன் ரூ.100 தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ஊழியர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் கேரியர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்