“கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்டுங்கள்” கல்லூரி மாணவர்களுக்கு, போலீஸ் கமிஷனர் அறிவுரை

“கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்ட வேண்டும்” என்று கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார்.

Update: 2018-08-31 23:15 GMT
சென்னை,

சென்னையில் மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. புத்தகத்தை சுமந்து வரவேண்டிய கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியோடு வலம் வரும் கலாசாரம் சமீபகாலமாக பரவி வருகிறது. சென்னையில் மாநிலக்கல்லூரி மாணவர்கள் மாநகர பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பளபளக்கும் பட்டா கத்திகளை சாலையில் தீப்பொறி பறக்க தேய்த்தபடி பீதியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமிஷனர் அறிவுரை

இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடீரென்று நேற்று காலை மாநிலக்கல்லூரிக்கு சென்றார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் அவர் ‘மைக்’கை பிடித்து அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டா கத்திகளுடன் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது தவறான ஒன்று. மாணவர்கள் தங்கள் கவனத்தை படிப்பில் காட்ட வேண்டும். போராட்டங்களில் ஈடுபட்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ளக்கூடாது.

நான் அரசு பள்ளியில் படித்துதான் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று இந்தநிலைக்கு முன்னேறி உள்ளேன். எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் படித்து மாணவர்கள் முன்னேற வேண்டும். போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாக கூடாது.

‘புத்தியை தீட்ட வேண்டும்’

மாணவர்கள் கத்தி கலாசாரத்தை கையில் எடுக்கக்கூடாது. கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்ட வேண்டும் கண்காணிப்பு கேமராக்களால்தான் தற்போது குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது. மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

மேலும் செய்திகள்