குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்தது புகையினால் குடியிருப்புவாசிகள் - வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்

அரியமங்கலத்தில் உள்ள குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகையினால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Update: 2018-08-31 21:48 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் 48 ஏக்கரில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சியில் உள்ள மொத்தம் 65 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை 3 மணியளவில் குப்பைக்கிடங்கில் தீ பற்றியது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு துறை அதிகாரிகள் தலைமையில் 2 தீயணைப்பு வாகனம் மற்றும் 2 மாநகராட்சி தண்ணீர் வாகனத்துடன் நிலைய அதிகாரி சரவணன் தலைமையில் 12 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் காற்றின் வேகம் காரணமாக மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதற்கிடையே குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயின் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிக புகையினால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், அருகில் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவசர காலத்தில் தீ விபத்து ஏற்படும்போது தீயை அணைப்பதற்காக, ஒரு வருடத்திற்கு முன்பு அந்த குப்பை கிடங்கிலேயே மிகப்பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் 9 தண்ணீர் குழாய்கள் அமைத்து அதன் மூலம் தண்ணீரை வெளியேற்றி தீயை அணைக்கும்படியான வசதிகளை செய்து இருந்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை எனவும், செயல்படுத்தியிருந்தால் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்