ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழர்களை சுட்டுக்கொன்றது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழர்களை சுட்டுக்கொன்றது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.

Update: 2018-09-02 22:00 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டையில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திர அரசு தமிழர்களை தொடர்ந்து திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வருகிறது. நேற்று முன்தினம் செம்மரம் வெட்டி கடத்தியதாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே கானாமலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான காமராஜ் என்பவரை ஆந்திர அதிரடிப்படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதுவரை 32 பேர் ஆந்திர அரசால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்களை அழைத்து சென்றவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் யார்? அரசு அதிகாரிகள் யார்? என்று கண்டுபிடிக்காமல் அப்பாவி தமிழர்களை கொலை செய்வதே ஏற்க முடியாது. அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. 8 வழிச்சாலை என்கிற பெயரில் விவசாயிகளின் நிலங்களை, அவர்களது அனுமதி இல்லாமல் அரசு கையகப்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அழித்து வருகிறது. இதற்காக உடனே விவசாயிகளை திரட்டி வாக்கெடுப்பு நடத்தி 8 வழிச்சாலை வேண்டுமா? வேண்டாமா? என கேட்டறிய வேண்டும்.
அதற்கு மக்களே தீர்ப்பளிக்க வேண்டும். 8 வழிச்சாலைக்கு எதிராக விரைவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பன்முகம் கொண்ட இந்த தேசத்தில் சாதி மதத்துக்கு இடம் இல்லை. மத்திய அரசு வேண்டும் என்றே மத வெறியை தூண்டும் வகையில் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து என வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.

எத்தனை அடக்கு முறைகள் வந்தாலும் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ராஜேஷ் உடனிருந்தார். 

மேலும் செய்திகள்