மணலூர் போக்குவரத்து கழக பணிமனையை கிராம மக்கள் முற்றுகை

சிதம்பரத்துக்கு பஸ் இயக்க கோரி மணலூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-09-02 21:45 GMT
சிதம்பரம், 


சிதம்பரம் அருகே உள்ளது மணலூர் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே பாலம் ஒன்று இருந்தது. இதன் வழியாக தான் சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு பஸ்கள் சென்று வந்தன. இந்த நிலையில், இந்த பாலம் மிகவும் பழமைவாய்ந்தது என்பதால், அதன் உறுதிதன்மையை இழந்து, இடிந்து விழும் நிலைக்கு சென்றது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, தற்போது புதிய பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியின் காரணமாக மணலூர், லால்புரம் பகுதி மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இவர்களுக்கான மாற்று பாதை ஏதும் அமைத்து கொடுக்காத காரணத்தினால், இந்த இரு கிராமங்களில் இருந்தும் சிதம்பரத்துக்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகள் முதல் அனைவரும் ஓடையின் உள்ளே இறங்கி தான் சென்று வருகிறார்கள். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஓடையில் அதிகப்படியான தண்ணீர் ஓடுகிறது. இதனால் இருகிராமத்தை சேர்ந்தவர்களும் சிதம்பரம் வர வேண்டும் என்றால் புறவழிச்சாலை வழியாக 10 கி.மீ. சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று இரு கிராமங்களை சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் அதிகளவில் ஓடுவதால், பாலம் கட்டும் பணியும் முடங்கி உள்ளது. இதனால், பாலம் கட்டும் பணி முடிய இன்னும் அதிகப்படியான மாதங்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மணலூர், லால்புரம் பகுதி மக்கள் நேற்று காலை 6 மணிக்கு ஒன்று திரண்டு மணலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பணிமனையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கிருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாசிமுத்தான் ஓடையில் பாலம் கட்டும் பணி முடியும் வரையில், எங்கள் கிராம பகுதியில் இருந்து சிதம்பரத்துக்கு சென்று வரும் வகையில் பஸ் வசதி வேண்டும் என்று தெரிவித் தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். போக்குவரத்து பணிமனை முன்பு 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், தி.மு.க. முனுசாமி, அ.தி.மு.க. லதா ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜாஹீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்