காதல் பிரச்சினையில் பயங்கரம்: தையல் தொழிலாளியை கடத்தி கொடூர கொலை

தளி அருகே காதல் பிரச்சினையில் தையல் தொழிலாளி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வரு கிறார்கள்.

Update: 2018-09-03 23:15 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவரபெட்டா பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சசிக்குமார் (வயது 23). தையல் தொழிலாளி. இவர் தளியில் மைசூரு சாலையில், தையல் கடை நடத்தி வந்தார். கடந்த 31-ந் தேதி மாலை தனது மோட்டார்சைக்கிளில் வெளியே புறப்பட்ட சசிக்குமார் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது தந்தை ராஜப்பா, நேற்று முன்தினம் தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தளி அருகே மதகொண்டப்பள்ளி - பின்னமங்கலம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.இதையடுத்து தளி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது சசிக்குமார் என்று தெரிய வந்தது. அவரை சிலர் கடத்தி இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சசிக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் அருகில் ஏரியில் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

கொலையுண்ட சசிக்குமார் தேவரபெட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை அதே ஊரை சேர்ந்த மல்லேஷ் என்பவரின் அண்ணனும் காதலித்து வந்தார். இந்த காதல் பிரச்சினை காரணமாக சசிக்குமாரை மல்லேஷ் தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் சசிக்குமாரை கொலை செய்ய முடிவு செய்த மல்லேஷ், தனது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சசிக்குமார், முரளி, சங்கரப்பா ஆகியோருடன் கடந்த 31-ந் தேதி சசிக்குமாரை கடத்தி உள்ளார். பின்னர் இரும்பு கம்பியால் அடித்தும், அரிவாளால் தலை, முகத்தை சரமாரியாக வெட்டியும் கொலை செய்து உடலை வீசினார்கள். சசிக்குமார் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளையும் அருகில் ஏரியில் போட்டனர்.

அதன்பிறகு கொலையாளிகள் தாங்கள் மாட்டி கொள்ளக்கூடாது என்பதற்காக தங்களின் 2 மோட்டார்சைக்கிள்களை மதகொண்டப்பள்ளி ஏரி அருகே முட்புதரில் மறைத்து வைத்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக மல்லேஷ், மற்றொரு சசிக்குமார், முரளி, சங்கரப்பா ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை காரணமாக தேவரபெட்டா பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தளி அருகே காதல் விவகாரத்தில் தையல் தொழிலாளியை கடத்தி கொடூரமாக கொலை செய்து உடலை வீசி சென்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்