மாமல்லபுரம் அருகே கல்லில் வடிக்கப்பட்ட 32 வகையான விநாயகர் சிலைகள்

மாமல்லபுரம் அருகே கல்லில் வடிக்கப்பட்ட 32 வகையான விநாயகர் சிலைகள் கேரளாவில் உள்ள கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

Update: 2018-09-03 22:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்து உள்ள குழிப்பாந்தண்டலத்தில் ஒரு தனியார் சிற்பக்கலை கூடத்தில் தலா 3 அடி உயரத்தில் சைவ சாஸ்திர முறைப்படி பக்தி கணபதி, சக்தி கணபதி, லஷ்மி கணபதி, பால கணபதி, திரிமுக கணபதி, ஹேரம்ப கணபதி, பஞ்சமுக கணபதி, சிம்மமுக கணபதி உள்ளிட்ட 32 வகையான விநாயகர் கற்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

இந்த விநாயகர் கற்சிலைகள் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகில் உள்ள செங்காள் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

குறிப்பாக சிவன் கோவில்களில் விநாயகர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். ஆனால் 32 வகையான விநாயகர் சன்னதிகள் உள்ள கோவில்களை காண்பது அரிது. செங்காள் சிவன் கோவில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது.

மாமல்லபுரம் சிற்பக் கலைக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற கற்சிற்ப விரிவுரையாளர் ஸ்தபதி பத்மநாபன் தலைமையில், குழிப்பாந்தண்டலம் சிற்பக் கலைக்கூடத்தில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 3 மாதமாக பணியாற்றி 32 வகை விநாயகர் சிலைகளை நேர்த்தியாக வடித்துள்ளனர். இவை தற்போது லாரி மூலம் கேரளாவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளன.

மேலும் செய்திகள்