வாட்ஸ்-அப்பில் தவறாக தகவல்களை பதிவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு

வாட்ஸ்-அப்பில் தவறாக தகவல்களை பதிவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-09-03 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி நடராஜன் கொடுத்த மனுவில், குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் தொடர்ந்து டாஸ்மாக் கடை நடந்து வருகிறது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடந்தபோது அதிகாரிகள் வந்து பேச்சுவார்தை நடத்தி, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்த பிறகு டாஸ்மாக் கடையை அகற்றி விடுகிறோம் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரைக்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குப்பைகள், தூசிகள் போன்றவை கலந்து வருகின்றன. இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

நச்சாந்துப்டடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலரை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்துடன், இவர்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்றும், இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் என்றும், வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து உள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு ஆடியோவையும் பதிவு செய்து உள்ளார். இதனால் மனமுடைந்த ஒருவர் விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது தவறான தகவல்களை வாட்ஸ்-அப்பில் பதிவு செய்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் இந்து முன்ணியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை இந்துசமய அற நிலையத்துறைக்கு சொந்தமான திலகர் திடலில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளித்தும், இதுவரை எந்தஒரு நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவில் நிலத்தை தனியாரால் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்