ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் - கலெக்டரிடம் மனு

ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-09-03 23:16 GMT
சேலம்,

சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் மாணவி ஒருவரை சில்மிஷம் செய்ததாக கூறி, சிலர் சதீசை செருப்பால் அடித்து தாக்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு வந்து ஆசிரியரை மீட்டனர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, ஆசிரியர் சதீசை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், எந்த தவறும் செய்யாத அவரை உடனடியாக விடுவிக்கவும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் மாவட்ட கல்வி அதிகாரி மதன்குமார் நேற்று மாலை அந்த பள்ளிக்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஆசிரியர், ஆசிரியைகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அதில், ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்