சிவமொக்கா மாநகராட்சியை கைப்பற்றியது பா.ஜனதாவினர் வெற்றி கொண்டாட்டம் 2 தமிழர்கள் கவுன்சிலர்களாக தேர்வு

சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியதால் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்களாக தேர்வாகியுள்ளனர்.

Update: 2018-09-04 00:07 GMT
சிவமொக்கா,

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி சிவமொக்கா, மைசூரு, துமகூரு மாநகராட்சி உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சிவமொக்கா மாநகராட்சியில் உள்ள 35 வார்டுகளில் பதிவான ஓட்டுகள், நேற்று பி.எச்.சாலையில் உள்ள அரசு கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பெரும்பாலான வார்டுகளில் பா.ஜனதா கட்சியே முன்னிலை வகித்தது.

இறுதியில் பா.ஜனதா கட்சி 20 வார்டுகளில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் சிவமொக்கா மாநகராட்சியை கைப்பற்றியது. 18 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலே ஒரு கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். ஆனால், பா.ஜனதா கட்சி 20 வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் கட்சி 7 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 6 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிவமொக்கா மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் 4 தமிழர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 2 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதாவது, 5-வது வார்டில் போட்டியிட்ட சிவக்குமார் என்பவரும், 30-வது வார்டில் போட்டியிட்ட சங்கர் என்பவரும் வெற்றி பெற்றனர். மற்ற 2 பேரும் தோல்வி அடைந்தனர்.

சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியதை தொடர்ந்து, பா.ஜனதா தொண்டர்கள் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். ஈசுவரப்பாவும், வெற்றி வேட்பாளர்களை கட்டி தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் ஈசுவரப்பா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்