சோபியாவிற்கு மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

மாணவி சோபியாவுக்கு யாரும் மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-09-05 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

மாணவி சோபியாவுக்கு யாரும் மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;–

அவசியம் இல்லை 

நமது நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயக உரிமை. அதில் இடம் பொருள் உள்ளது. மாணவி சோபியாவின் கருத்து மாறுபட்ட கருத்தாக இருந்தால், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு தனது மாறுபட்ட கருத்தை அவரிடம் சொல்லலாம். அரசின் கொள்கை மாற்றத்தில் ஏதாவது கருத்து இருந்தாலும் கூட பரிமாறி இருந்தால், இவ்வளவு பிரச்சினைக்கு வழிவகுத்து இருக்காது. ஆனால் பொது இடத்தில் அவரும் பாதிக்கப்படுகின்ற மனநிலையை உருவாக்கி விமானம் வருகின்ற நேரத்தில் அவ்வளவு அவசரமாக அந்த கருத்தை பதிவு செய்ய அவசியம் இல்லை.

அரசு வேடிக்கை பார்க்காது 

விமர்சனங்களை எந்த தலைவராக இருந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால் அதனை வெளிபடுத்துகின்ற விதம் இருக்கிறது. அந்த மாணவிக்கு நிறைய அவகாசம் இருந்து இருக்கிறது. அவர் நேரடியாக தமிழிசை சவுந்தரராஜனிடம் சொல்லி இருந்தால், அது மரபு படி அனைவரும் ஏற்று கொள்ள கூடிய கருத்தாக இருந்திருக்கும்.

சோபியாவிற்கு மிரட்டல் வருவதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். யாருக்கும் யாரும் மிரட்டல் விட முடியாது. அப்படி மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறினார்.

மேலும் செய்திகள்