பெண்ணிடம் வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-09-07 22:34 GMT
சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை 2-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 40). இவர், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி ஜான்சன்பேட்டையில் இருந்து அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த ஒருவர் திடீரென சரஸ்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இதை பார்த்ததும் அங்கு தடுக்க வந்த பொதுமக்களையும் அந்த ஆசாமி மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி என்கிற உதயகுமார் (33) என்பவர், சரஸ்வதியின் பர்சை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரஸ்வதியிடம் வழிப்பறி செய்த வழக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் தீர்ப்பு கூறினார். பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சின்னதம்பி என்கிற உதயகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்