மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் ஒரு வாலிபர் தற்கொலை பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அவுரங்காபாத்தில் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-12 22:00 GMT
அவுரங்காபாத், 

மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அவுரங்காபாத்தில் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி தற்கொலை

மராத்தா சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். அவர்கள் போராட்டம் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கோரிக்கையை வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது மேலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அகமத்நகரை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் தணிவதற்குள் மற்றொரு வாலிபரும் இதே விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

தூக்குபோட்டு...

அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் தாலுகா காலே போர்காவ் கிராமத்தை சேர்ந்த வாலிபர் கிஷோர் சிவாஜி(வயது26). இவர் நாசிக் மாவட்டம் யவோலாவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ,வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு கொன்றுவிட்டது

மேலும் அவர் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அதில், மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தான் உயிரை மாய்ப்பதாகவும், தான் தற்கொலை செய்துகொள்ளவில்லை, இந்த அரசு என்னை கொன்றுவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே வாலிபர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அந்த கிராமமக்கள் தாலுகா அலுவலகத்தில் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருடன் சேர்ந்து மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்