கச்சிராயப்பாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடுத்தடுத்து நடந்த விபத்தால் பரபரப்பு

கச்சிராயப்பாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-12 22:00 GMT
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சபிள்ளை மகன் சண்முகம் (வயது 40). இவர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். கச்சிராயப்பாளையம் அருகே ஏர்வாய்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, எதிரே எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிவேல்(40) என்பவர் சிமெண்டு கட்டைகளை வைத்துக்கொண்டு கச்சிராயப்பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சண்முகம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பழனிவேலின் மோட்டார் சைக்கிளில் இருந்த சிமெண்டு கட்டைகள் மீது மோதியது. இதில் சண்முகமும், பழனிவேலும் தங்களது மோட்டார் சைக்கிள்களில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ

இதற்கிடையே சண்முகத்தின் பின்னால் வேளாங்குறிச்சியை சேர்ந்த பிச்சபிள்ளை மகன் சிவக்குமார்(30) ஓட்டி வந்த ஆட்டோ, கீழே கிடந்த சிமெண்டு கட்டைகள் மீது ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சிவக்குமார் மற்றும் ஆட்டோவில் வந்த பெங்களூருவை சேர்ந்த பழனியம்மாள்(45), நீலமங்கலத்தை சேர்ந்த சேகர் மனைவி கிருஷ்ணவேணி(26) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் சண்முகம், பழனிவேல் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்