போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி, ‘வாக்கி-டாக்கி’ உடைப்பு 2 பேர் கைது

வியாசர்பாடியில் உள்ள மதுபான கடை பாரில் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர், அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதுடன், அவரது ‘வாக்கி-டாக்கி’ மற்றும் செல்போனையும் கீழே போட்டு உடைத்தனர்.

Update: 2018-09-12 20:58 GMT
பெரம்பூர், 

வியாசர்பாடியில் உள்ள மதுபான கடை பாரில் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர், அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதுடன், அவரது ‘வாக்கி-டாக்கி’ மற்றும் செல்போனையும் கீழே போட்டு உடைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சர்மாநகர் 8-வது தெருவில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் அருகே உள்ள பாரில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் 2 வாலிபர்கள், பார் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் எம்.கே.பி.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ்(வயது 53) சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு, மது அருந்த வாங்கிய நொறுக்கு தீனிக்கு பணம் கொடுக்காமல் பார் ஊழியர்களுடன் 2 பேர் தகராறில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியே செல்லும்படி சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.

போதையில் இருந்த அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தரக்குறைவாக பேசினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாசை தாக்கியதுடன், அவரை தள்ளிவிடவும் முயன்றனர். அத்துடன் அவரது சட்டைப்பையில் இருந்த ‘வாக்கி-டாக்கி’ மற்றும் செல்போனையும் பறித்து கீழே போட்டு உடைத்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், உடனடியாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், வியாசர்பாடி கென்னடி நகரைச் சேர்ந்த ஜெகதீஷ்(28) மற்றும் கவுதம்(25) என்பதும், இருவரும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும், சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியதுடன், அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் 2 பேர் மீதும் எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள மதுக்கடை பாரில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்காமல் பார் ஊழியர்களுடன் குடிபோதையில் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதுபற்றி மதுபான கடை மேற்பார்வையாளர் இளங்கோ(32) போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்குவந்த போலீசார், பார் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியை சேர்ந்த ஜெயகோபி(51) என்பவரை பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்