துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

துப்புரவு தொழிலாளர் களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-12 22:30 GMT
கோவை,

கோவை கலெக்டர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மனித கழிவு அகற்றுவோர் சட்டத்தின் படி மனித கழிவை அகற்றுவதாக வரையறுக்கப்பட்டவர்கள், தோல் உறிப்பவர்கள், தோல் பதனிடுபவர்கள், குப்பை சேகரிப்பவர்கள், துப்புரவு தொழிலில் ஈடுபடுபவர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் ‘பிரீ மெட்ரிக்’ கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக் கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு (2018-19) முதல் பெற்றோருடன் வசித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.3 ஆயிரமும், விடுதியில் தங்கியிருந்து படித்து வருவோருக்கு ரூ.8 ஆயிரமும் கல்வி உதவித்தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

சுகாதார தொழில்

இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கி, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் மட்டும் தகுந்த மாற்று அடையாள அட்டைகளை பயன்படுத்திட வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மேற்கண்ட சுகாதார தொழிலில் ஈடுபடுபவராக இருப்பின், அவர்கள் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தகுதியான அலுவலர்களின் சான்று பெற்று தங்களுடைய குழந்தை படித்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்